×

பதவி சுகத்தை அனுபவிப்பதற்காக அல்ல நாட்டின் நலனுக்காக 3வது முறை ஆட்சி அமைக்க பாஜ விரும்புகிறது: அடுத்த 100 நாட்கள் புத்துணர்ச்சியுடன் செயல்பட பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: ‘ஒன்றியத்தில் 3வது முறையாக ஆட்சி அமைக்க விரும்புவது பதவி சுகத்திற்காக அல்ல, நாட்டிற்கு உழைப்பதற்காகவே. புதிய வாக்காளர்களை சென்றடையவும், அவர்களின் நம்பிக்கையை பெறவும் அடுத்த 100 நாட்கள் பாஜ தொண்டர்கள் புத்துணர்ச்சியுடன் செயல்பட வேண்டும்’ என பாஜ தேசிய மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தினார். மக்களவை தேர்தலையொட்டி, பாஜ கட்சியின் 2 நாள் தேசிய மாநாடு டெல்லி பாரத் மண்டபத்தில் நடந்தது. பிரதமர் மோடி தொடங்கி வைத்த இம்மாநாட்டில் ஒன்றிய அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் உட்பட நாடு முழுவதும் இருந்து பாஜ நிர்வாகிகள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

மாநாட்டின் நிறைவு நாளான நேற்று பிரதமர் மோடி நிறைவுரையாற்றினார். அவர் கூறியதாவது: வரும் 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற, இப்போது தேசம் பெரிய கனவுகளை காண வேண்டும். பெரிய தீர்மானங்கள் எடுக்க வேண்டும். அடுத்த 5 ஆண்டுகள் நமக்கு முக்கியமானதாக இருக்கும். அதில் வளர்ந்த பாரதத்தை நோக்கி மிகப்பெரிய பாய்ச்சலை முன்னெடுக்க வேண்டும். அதற்கு முதல் கட்டாயம், ஒன்றியத்தில் வலுவான எண்ணிக்கையில் பாஜ தலைமையில் மீண்டும் ஆட்சி அமைவதை உறுதி செய்ய வேண்டும்.

தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகள் என்கிற மைல் கல்லை எட்ட வேண்டும் என்றால் பாஜ 370 தொகுதிகளை கட்டாயம் வெல்ல வேண்டும். உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகள் இப்போது இந்தியாவுடன் ஆழமான உறவை உருவாக்க விரும்புகின்றன. நாடாளுமன்ற தேர்தல் இன்னும் முடியாத நிலையிலும், அடுத்த ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் பல்வேறு நாடுகளுக்கு வர எனக்கு அழைப்பு வந்துள்ளது. இதன் அர்த்தம், உலகெங்கிலும் உள்ள நல நாடுகள் ஒன்றியத்தில் மீண்டும் பாஜ ஆட்சி வருவதை முழுமையாக நம்புகின்றன.

நாங்கள் 3வது முறையாக ஆட்சியை பிடிக்க முயற்சிப்பது, பதவி சுகத்தை அனுபவிப்பதற்காக அல்ல. நாட்டிற்காக உழைப்பதற்காகவே. நான் எனது வீட்டை மட்டும் முக்கியமாக கருதியிருந்தால், கோடிக்கணக்கான மக்களுக்கு வீடு கட்டித் தந்திருக்க முடியாது. 10 ஆண்டுகளில் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து மீட்டது சாதாரண சாதனை அல்ல. ஒரு மூத்த தலைவர் ஒருமுறை என்னிடம், ‘பிரதமராகவும் முதல்வராகவும் போதுமான அளவு உழைத்து விட்டீர்கள். இனி ஓய்வெடுக்க வேண்டியதுதானே’ என்றார். நான் அரசியலுக்கு உழைப்பவன் அல்ல, நாட்டிற்காக உழைப்பவன். சத்ரபதி சிவாஜி மகாராஜின் கொள்கைப்படி வாழ்கிறேன். எனது உழைப்புகள் அனைத்து நாட்டு மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. இந்தியர்களின் கனவுகள் எனது கடமைகள்.

பாஜவை கருத்தியல் ரீதியாகவோ கொள்கைகளின் அடிப்படையிலோ எதிர்கொள்வதற்கான தைரியம் எதிர்க்கட்சிகளுக்கு இல்லை. காங்கிரஸ் நம்பிக்கை இழந்துவிட்டது. எனவே, என் மீது பொய்யான குற்றச்சாட்டை முன்வைப்பது காங்கிரஸ் தலைவர்களின் ஒற்றை புள்ளியாகி விட்டது. புதிய வாக்காளர்களை சென்றடையவும், அவர்களின் நம்பிக்கையை பெறவும் அடுத்த 100 நாட்கள் பாஜ தொண்டர்கள் புத்துணர்ச்சியுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

* மகாபாரத போருடன் ஒப்பிட்ட அமித்ஷா

மாநாட்டில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசுகையில், ‘‘மகாபாரதப் போரில் கவுரவர்கள், பாண்டவர்கள் என 2 படைகள் இருந்ததைப் போல இன்று மக்களவை தேர்தலில் 2 அணிகள் உள்ளன. அதில் ஒன்று பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியும், மற்றொன்று காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி. இந்தியா கூட்டணி அனைத்து வம்சக் கட்சிகளின் கூட்டணியாகும். அது ஊழல், திருப்திப்படுத்தும் அரசியலை வளர்க்கிறது. அதுவே பாஜ கூட்டணி தேசத்தின் கொள்கைகளைப் பின்பற்றும் கட்சிகளின் கூட்டணியாக உள்ளது. இதில் பாஜ வென்று, 3வது முறையாக பிரதமராக மோடி பதவியேற்பது உறுதி’’ என்றார்.

* அடுத்த 1,000 ஆண்டுகள் ராம ராஜ்ஜியம் நீடிக்கும்

பாஜ தேசிய மாநாட்டில், அயோத்தி ராமர் கோயில் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், ‘அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் பிரமாண்டமான, தெய்வீக கோயிலை கட்டியிருப்பது நாட்டிற்கு வரலாற்று மற்றும் புகழ்பெற்ற சாதனை. இதற்காக பிரதமர் மோடியை மனதார பாராட்டுகிறோம். இந்திய நாகரிகம், கலாச்சாரத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் ராமர், சீதை மற்றும் ராமாயணம் இருப்பது குறிப்பிடத்தக்கது. ராமர் கோயில் கட்டப்பட்டதன் மூலம் அடுத்த 1000 ஆண்டுகளுக்கு இந்தியாவில் ராமர் ராஜ்ஜியம் நீடித்திருக்கும் என்பதை குறிக்கிறது’ என கூறப்பட்டுள்ளது.

* பாஜ தலைவர் தேர்வில் கட்சி விதியில் திருத்தம்

பாஜ கட்சியின் தேசிய தலைவர்கள் பொதுவாக உள்கட்சி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார். தற்போது, மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலுக்காக பாஜ கட்சி தீவிரமாக பணியாற்றி வருவதால், உட்கட்சி தேர்தல் நடத்தி தலைவரை முடிவு செய்யும் நிலை இல்லை. இதுபோன்ற அவசர சூழலில் கட்சி தலைவர், அவரது பதவிக்காலம் குறித்து கட்சியின் நாடாளுமன்ற குழு முடிவெடுக்கலாம் என பாஜ கட்சியின் அரசியலமைப்பு சட்ட விதியில் நேற்று திருத்தம் கொண்டு வர, தேசிய கவுன்சில் குழு மாநாட்டில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் தற்போதைய பாஜ தலைவர் ஜே.பி.நட்டா பதவிக்காலம் மக்களவை தேர்தலுக்குப் பிறகான வரும் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

The post பதவி சுகத்தை அனுபவிப்பதற்காக அல்ல நாட்டின் நலனுக்காக 3வது முறை ஆட்சி அமைக்க பாஜ விரும்புகிறது: அடுத்த 100 நாட்கள் புத்துணர்ச்சியுடன் செயல்பட பிரதமர் மோடி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : BJP ,PM Modi ,New Delhi ,Union ,National Conference of the BJP ,
× RELATED பாஜவின் கோட்டைகளிலும் மோடிக்கு ஏன் பயம்?